மின் கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் ஜூலை 23ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்தும் கட்டண உயர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை பயன்பெறுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று தி.மு.க. அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதேவேளை தி.மு.க. அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கடமையாகும். மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட உள்ளது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்கு ரூ.35,981 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியங்கள் இந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டுமானால் நஷ்டத்தை குறைக்க முன்னெடுத்த வழிவகைகள் குறித்து விளக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலைக்கான இடைவெளியை குறைக்க எடுக்கப்படும் முன்னெடுப்புகள் என்ன? என்பதை மின் வாரியங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.19,235 கோடி. இதை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு பகுதியிலாவது அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி ஒரு தடவையாவது அதன் மூலமாக மின் கட்டணத்தை கணக்கீடு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதே, தவிர மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் மானியம் கொடுப்போம் என்று எங்கும் சொல்லவில்லை.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தை சீரமைப்பதற்கு முன்பாக இதுபோன்ற கட்டண உயர்வு எந்த பயனையும் அளிக்காது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட்டு, தமிழக மின் உற்பத்தி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் ஜூலை 23 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் மின் உயர்வை கண்டித்து மிகபெரும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.