காஜல் அகர்வால்: தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் தான் இவர் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது காலம் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது அவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் தற்போது ‘கோஸ்டி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். ஹாரர் காமெடி படமாக இது உருவாகிறது. இதில் காஜல் அகர்வாலுடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதில் இடம் பெறும் ஒரு பாடலை விவேக் எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர்கள் சிலர் சேர்ந்து பாடினால் நன்றாயிருக்கும் என்று சாம் சி.எஸ்க்கு ஐடியா தோன்றியது. இதை இயக்குனர் கல்யாணும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த பாடலை இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், லியோன் ஜேம்ஸ், விவேக் மெர்வின், ஹரி சரண், சத்ய பிரகாஷ், குணா, பிரேம்ஜி, நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்ட 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் படத்தின் கதைக்கு ஹைலைட்டாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.