ஆஸ்கர்: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து மூன்று படங்கள் போட்டியில் இருந்தன. இதில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ ஆவண படம், ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படம் மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை அடங்கும். கடந்த பல ஆண்டுகளாக இந்திய படங்களோ இந்தியர்களோ ஆஸ்கர் அவார்டை வெல்லாமல் இருந்தனர். ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பானு அத்தையா பெற்றார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ‘காந்தி’ திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை பெற்றார்.
சத்யஜித் ரே 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். 1992ல் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியத் திரைப்பட இயக்குனர் இவர்தான். பின்னர் 2009ம் ஆண்டில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் இசைக்காக 2 விருதுகளை வென்றார். அதே ஆண்டில் அதே படத்தின் சவுண்ட் மிக்சிங்கிற்காக கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி அகாடமி விருதை வென்றார். அதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்பாேது கீரவாணியும், கார்த்திகி கொன்சால்சும் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு கெளரவம் சேர்த்துள்ளனர்.