அபிஷேக் பச்சன்: தமிழில் பெண் இயக்குனர் மதுமிதா இயக்கிய படம் ‘கேடி என்கிற கருப்புதுரை’. இந்த படம் 70 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை சொல்லும் கதையை மையமாக கொண்டது. இதில் முதியவராக மு. ராமசாமி நடித்தார். சிறுவன் வேடத்தில் நாக விஷால் நடித்திருந்தான். இந்த படத்துக்காக நாக விஷாலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் மதுமிதா இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் நடிகர் அபிஷேக் பச்சனிடம் கதை கூறியுள்ளார். இந்த கதை அபிஷேக் பச்சனுக்கும் பிடித்துவிட்டதாம். சம்பளம், கால் ஷீட் உள்ளிட்ட விஷயங்களை பற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இதிலும் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். பார்த்திபனே இந்தியிலும் இயக்கி வருகிறார். இதையடுத்து கேடி என்கிற கருப்புதுரை படத்திலும் நடிக்க அபிஷேக் பச்சன் ஆர்வம் காட்டுகிறார். ‘தமிழில் எப்போதும் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் வெளியாகும். சமீபகாலமாக மேக்கிங்கிலும் தமிழ் சினிமா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதனால் தமிழ் படங்களின் ரீமேக்கில் நடிக்க அபிஷேக் பச்சன் தயாராக இருக்கிறார்’ என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.