லியோ: ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார். 14 வருடங்களுக்கு பிறகு விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் அவரவருக்கு 67வது படமாக அமைந்துள்ள இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அர்ஜூன் கூறுகையில்,
‘இப்படத்தின் கதை மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்ஷ்ன் கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார். விஜய்யுடன் நான் இணைந்து நடிப்பது எங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் போட்டோவை த்ரிஷா பதிவு செய்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் காஷ்மீரி்ல் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு ஆகியோருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். ‘கைதி’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் தமிழ்நாடு அளவிலான போதைப்பொருள் கடத்தலைப் பதிவு செய்திருந்த லோகேஷ் கனகராஜ், ‘லியோ’ படத்தில் இந்தியா அல்லது சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலைப் பற்றி படமாக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.