நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா தனது 41வது பிறந்தநாளை நேற்று படக்குழுவினருடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன், தேவராட்டம் போன்ற கிராமத்து கதைகளை மையப்படுத்தி பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இதானி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஆர்யா தனது 41 வது பிறந்தநாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி நான்கு பெரிய கேக்குகளை பெயர் வடிவில் அடுக்கி வைத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி கேக்கை வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் ஒவ்வொருவரும் ஆர்யாவுக்கு கேக் ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து நடிகர் ஆர்யா தனது பிறந்தநாளை அர்த்தமுள்ள பிறந்தநாளாக கொண்டாட விரும்பி குறிஞ்சான் குளம், ஆராய்ச்சிப்பட்டி, இளவேலங்கால் உள்ளிட்ட கிராமங்களில் படிக்கும் தாய் அல்லது தந்தையை இழந்த 10 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுமார் ரூ.6000 மதிப்புள்ள அழகான சைக்கிள்களை தனது பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.