நடிகர் கார்த்தி: 2023 பிறந்துள்ள இந்த புத்தாண்டில் விவசாயிகளையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் தர இருப்பதாக நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
‘கடந்த 2022ல் எனது நடிப்பில் ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1′,’சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அனைத்து தரப்பினரின் ஆதரவால் அப்படங்கள் வெற்றி பெற்று தொழில் ரீதியாக கடந்த ஆண்டு எனக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. அதேவேளையில் எனக்குள் இருக்கும் நல்லதொரு கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக ‘வந்தியத்தேவன்’, ‘சர்தார்’ போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கேரக்டர்களில் நடித்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
எனது அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு விவசாயிகளை அங்கீகரிக்க நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வர அதிக தெரிவுநிலையை உருவாக்குவது போன்றவற்றை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். தொடர்ந்து பல வருடங்களுக்கு எனது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் மகிழ்விப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.