டாடா: ‘லிப்ட்’ படத்தைத் தொடர்ந்து கவின் நடித்துள்ள படம் ‘டாடா’. கணேஷ் கே.பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். கவினின் தந்தையாக கே.பாக்யராஜும், தாயாக ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படம் குறித்து கதாநாயகன் கவின் கூறுகையில்.
‘கைக்குழந்தையுடன் கல்லூரிக்கு படிக்கச் செல்லும் ஒரு மாணவனின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மாணவன் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். வழக்கமான குணாதிசயங்கள் கேரக்டர் என்றாலும், இதில் என் பாடிலாங்வேஜ் மற்றும் மேனரிசங்களை மாற்றி நடித்துள்ளேன். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் நடித்திருந்த மலையாள நடிகை அபர்ணா தாஸ் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ், ‘வாழ்’ பிரதீப் ஆன்டனி நடித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் கே.பாக்யராஜிடம் இருந்து நடிப்பு சம்பந்தமாக பல நுணுக்கங்களை கற்றுக் காெள்ள முடிந்தது’ என்றார். ‘டாடா’ என்பது ‘டாடி’ என்பதன் செல்லப்பெயர் என்றும் அவர் கூறினார். இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.