வாரிசு. விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா, யோகி பாபு, சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் உள்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் அரங்கம் முழுவதும் திரண்டிருந்தனர். மேலும் இவ்விழாவி்ல் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் கலந்து காெண்டார். இவர் ஏன் விழாவில் கலந்து கொண்டார் என்ற கேள்வி எல்லாேருக்கும் எழுந்தது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது முக்கியமான தகவல் ஒன்றை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்தார். அதாவது வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதை விஜய் உறுதி செய்தார். ‘வாரிசு படத்தில் சில காட்சிகள் என்றாலும் அதில் நடிக்க ஒப்புக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா மற்றும் குஷ்பூ ஆகியோருக்கு என் இதயம் கலந்த நன்றிகள். எஸ்.ஜே. சூர்யாவுக்கு நிறைய கனவுகள் இருக்கிறது. அனைத்தும் விரைவில் நிறைவேறும்’ என்று கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா வாரிசு படத்தில் நடிக்கும் தகவல் இதுவரை வெளிவராத தகவலாகவே இருந்தது. தற்போது விஜய் அதனை உறுதி செய்திருக்கிறார். விஜய் உடன் மெர்சல் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் மிரட்டி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்திலும் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.