கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.
சீயான் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் நடிகர் விக்ரம் கடைசியாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக நடிப்பில் வெளிவந்த படம் கடாரம் கொண்டான். அதன் பின் எந்த படமும் அவருக்கு வெளிவரவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் வெளியாகும் முதல் படமாக விக்ரமுக்கு கோப்ரா திரைப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன், த்ரில்லர் படம் கோப்ரா. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் லலித் குமார் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் 20 கெட்டப்களில் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

டைட்டில் ரோலான கோப்ரா கேரக்டர் உள்ளிட்ட பல ரோல்களில் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ். இஃர்பான் பதான், ரோசன் மேத்தீவ், பத்மபிரியா, கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் தமிழில் அறிமுகமாக உள்ள படம் இது. கேஜிஎஃப் இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி, கோப்ரா படத்தின் முலம் தமிழிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் பெற்றுள்ளது. கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி பெற்றுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை சோனி லைவ் ஓடிடி தளம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று நடைப்பெற்றது. நடிகர் விக்ரமுக்கு ஜூலை 8 ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அது சாதாரண நெஞ்சு வலி மட்டுமே என மருத்துவ அறிக்கையும் வெளியானது. விக்ரமின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொள்வாரா? என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நடந்த ‘கோப்ரா’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.