தங்கலான்: ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடிகர் விக்ரம் அவர்கள் நடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து விக்ரம் அவர்கள் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகன், பூ பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது.
அப்போது விக்ரம், பசுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இது விக்ரம் நடிக்கும் 61வது படமாகும். இப்படத்தின் தலைப்பு ‘தங்கலான்’ என்று நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் கோலார் தங்க சுரங்கத்தை உருவாக்கிய தமிழக தொழிலாளிகளின் கதை என்றும், அப்போது அவர்கள் சந்தித்த பிரச்சினைகளை பற்றி பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பா.ரஞ்சித் அவர்கள் தொழிலாளிகளின் வாழ்க்கை பிரச்சினை மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களையே தன் படங்களின் வாயிலாக கூறி வருகிறார். இப்படமும் அம்மாதிரியான ஒரு கதை பின்னணியையே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.