ஜெயசுதா: கடந்த 1983ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சலங்கை ஒலி’. தேசிய விருது பெற்ற இப்படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவியதாக சமீபத்தில் ஜெயசுதா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
‘கே.விஸ்வநாத் இயக்கிய ‘சலங்கை ஒலி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று முதலில் என்னிடம் பேசி ஒப்பந்தம் செய்தனர். அப்போது கே.விஸ்வநாத் எனக்கு அட்வான்ஸ் பணமும் கொடுத்தார். ஆனால் திடீரென்று குறிப்பிட்ட தேதிகளில் கமல்ஹாசன் தேதி கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்குள் நான் என்.டி.ராமாராவ் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இதனால் ‘சலங்கை ஒலி’ படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று சொல்லி கே.விஸ்வநாதனிடம் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டேன்.
இதுபோல் நான் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்ததால் கே.விஸ்வநாத்துக்கு என் மீது அதிக கோபம் ஏற்பட்டது. இதையடுத்து பல வருடங்களாக அவர் என்னிடம் பேசாமல் இருந்தார். இப்போது யோசித்துப் பார்க்கும் போது அன்று நான் செய்தது சரிதான் என்று தோன்றுகிறது. அதாவது ‘சலங்கை ஒலி’ படத்தில் இடம் பெற்ற அந்தக் கேரக்டருக்கு எனது தோழி ஜெயப்பிரதா மிகப் பொருத்தமாக இருந்தார்’ என்று அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.