கேரளா: கடந்த 1972ம் ஆண்டு ‘சுயம்வரம்’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அடூர் கோபாலகிருஷ்ணன் தனது முதல் படத்திலேயே மாஸ்கோ திரைப்பட விருதுகள் முதல் தேசிய விருதுகள் வரை அள்ளிக் குவித்து கவனம் பெற்றார். இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என 4 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு அவர் இயக்கிய ‘கொடியேட்டம்’, ‘எலிப்பாதாயம்’, ‘அனந்தராம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும் தேசிய விருகள் கிடைத்தன.
80 வயதான அடூர் பாலகிருஷ்ணன் இதுவரை 16 தேசிய விருதுகள், 17 கேரள மாநில விருதுகள், மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். 1984ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை தொடர்ந்து 2006ம் ஆண்டு பத்மவிபூஷன் விருதையும் வழங்கி மத்திய அரசு அவரை கெளரவித்தது.
வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்காக திரையுலக ஜாம்பவான் அடூர் கோபாலகிருஷ்ணன் கேரள மாநிலம், துவாயூர் கிராமத்திலுள்ள தனது பூர்விக நிலமான 13.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்க, தனது ஒரே மகளான அஸ்வதி ஐ.பி.எஸ் அவர்களை கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார். மேலும் அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூர்வீக நிலத்தை தானமாக வழங்குவதாகவும், இது நன்கொடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அமைச்சர் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.