லைலா: நடிகை லைலா அவர்கள் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் ‘சர்தார்’. இதன் அனுபவம் குறித்து லைலா அவர்கள் கூறியதாவது.
திருமணத்திற்கு பிறகு நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நல்ல மனைவி, நல்ல மருமகள், நல்ல தாய் என பல பொறுப்புகளை சுமக்க வேண்டியிருந்தது. கணவர் பிசினஸ் பொறுப்பை பார்த்து கொண்டதால் நான் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு பிள்ளைகளை பார்த்துக் கொண்டேன். பிள்ளைகள் தங்களை தானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். எனது ரீஎன்ட்ரிக்காக கதைகள் கேட்டேன். எதுவுமே செட்டாகவில்லை. இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக, அண்ணியாக, அக்காவாக நடிப்பது போன்ற கேரக்டர்கள் வந்தது. அப்படி நான் நடித்தாலும் ரீஎன்ட்ரியாகும் படத்தில் கேரக்டர் புதிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்போது கார்த்தியின் ‘சர்தார்’ பட வாய்ப்பு வந்தது.
மகனுக்காக சமூக விரோத கும்பலை எதிர்த்துப் போராடுபவர் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். திரைத்துறை இன்று நிறைய மாறிவிட்டது. மரத்தைச் சுற்றி டூயட் பாடுகின்ற காலம் மறைந்துவிட்டது. இப்போது படத்துக்கு நல்ல கதைதான் ஹீரோ. மக்களும், இரசிகர்களும் மிக வித்தியாசமான கதைகளைப் பெரிதும் வரவேற்று இரசிக்கின்றனர். அதற்கேற்பவே இன்றைய இளைஞர்களும் புதிய கதைக்களத்தில், மிக வித்தியாசமான கோணங்களில் கதை சொல்கின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கின்றேன் என்று அவர் கூறினார்.