ஜோதிகா: வட இந்தியாவை சேர்ந்த நடிகை ஜோதிகா பாலிவுட்டில் நடித்து பின்பு கோலிவுட்டில் அஜித்தின் வாலி படம் மூலம் அறிமுகமானார். பிறகு பல படங்களில் தனது ஜோடியாக நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பிறகு நிறைய கனமாக கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் ஜோதிகா தற்போது மம்முட்டி ஜோடியாக ‘காதல் தி கோர்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஜோதிகா முதல் முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு செல்கிறார் ஜோதிகா. அவர் இந்தியில் நடித்த முதல் படம் ‘டோலி சாஜா கே ரக்னா’. இப்படம் கடந்த 1998 நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்தது. இதையடுத்து 2001ல் ‘லிட்டில் ஜான்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த ஜோதிகா, பின்னர் எந்தவொரு இந்தி படத்திலும் நடிக்கவே இல்லை. தற்போது ஜோதிகா 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிரபல மும்பை தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். துஷார் இத்ராணி இயக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.