தமிழில் 31 வருடங்களுக்குப் பிறகு நடிகை ‘அமலா’ நடித்துள்ள ‘கணம்’ திரைப்படம்

0
14

நடிகை அமலா: செப்டம்பர் 12 ம் தேதி மேற்கு வங்கத்தில் பெங்காலி தந்தைக்கும், ஐரிஷ் தாய்க்கும் மகளாக பிறந்தவர் அமலா முகர்ஜி. அவரது தந்தை கடற்படை அதிகாரியாக பணியாற்றினார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த அமலா, பிறகு சென்னைக்கு வந்து கலாசேத்ராவில் சேர்ந்து பயின்றார். கடந்த 1986 ல் டி. ராஜேந்தர் அவர்கள் இயக்கி நடித்த ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி அந்தஸ்து பெற்றார்.

1980 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கணிசமாக நடித்து புகழ் பெற்றார். அதை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்  அவரது புகழுக்கு கை கொடுத்தது. கடந்த 1987 ல் ஆர்.சி. சக்தி இயக்கிய ‘கூட்டுப்புழுக்கள்’ என்ற படத்தில் அமலாவும், இரகுவரனும் ஜோடியாக நடித்தனர். இதில் ரகுவரன் அமலாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதை ரகுவரன் அமலாவிடம் துணிச்சலாக கூறியுள்ளார். ஆனால் அமலா அந்த காதலை ஏற்கவில்லை. அதற்கு பிறகு அவர் ரகுவரனை வெறுத்து ஒதுக்கியதாகவும், அவரிடம் பேசுவதையே தவிர்த்ததாகவும் அந்த கால ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது.இது பற்றி ரகுவரன் அவர்களே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

amalas kanam movie

ராம் கோபால் வர்மா இயக்கிய ‘சிவா’ என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அமலா நடித்தார். இதில் வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்கும் போதே அமலா நாகார்ஜுனாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பிறகு பிரியதர்ஷன் இயக்கிய ‘நிர்ணயம்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது நாகார்ஜுனாவுடனான அமலாவின் நட்பு உயிருக்கியரான காதலாக மாறியது. பின்னர் 1992 ஜுன் 11ம் தேதி இருவரும் காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் உள்ளார். இதையடுத்து அமலா அவர்கள் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழுமையான குடும்பத் தலைவியாக மாறினார். பின்னர் அவர் ஐதராபாத்தில் புளு கிராஸ் இயக்கத்தை தொடங்கினார்.

அதன் மூலம் அவர் செல்லப்பிராணிகளை பாதுகாப்பதிலும், சில சமூக பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழில் அமலா நடித்த கடைசிப்படம் ‘கற்பூர முல்லை’. இதை பாசில் இயக்கினார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2012 ல் ‘Life is Beautiful’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்தியிலும், மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஓகே ஓகே ஜுவிதம்’ என்ற படத்தில் நடித்தார். தற்பொழுது இப்படம் தமிழில் ‘கணம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் 31 வருடங்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here