காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 1990 களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இடையில் 1999 ல் ஒரு தியேட்டர் மட்டும் திறக்கப்பட்டது. அங்கு தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 32 ஆண்டுகளாக காஷ்மீரில் தியேட்டர்கள் மூடப்பட்டள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு வணிக வளாகத்தில் தியேட்டர் திறக்கப்பட்டு ஒத்திகைக்காக ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கு காஷ்மீர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் காஷ்மீரில் ஐநாக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இந்த தியேட்டரை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைக்கிறார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி மணி ரத்னம் இயக்கி, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து, விக்ரம், ஜெயம் ரவி, காா்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ள விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் ரிலீசாகிறது. காஷ்மீரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் புதிய படங்களாக இந்த 2 திரைப்படங்களும் அங்கு திரையிடப்பட உள்ளன. இதனால் காஷ்மீரில் உள்ள சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.