ஜீவிதா: தமிழில் பல்வேறு படங்களில் நடித்த நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து மணந்தார். கடைசியாக அவர் 1988ல் ‘வளைகாப்பு’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இப்போது 34 வருடம் கழித்து தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் இதுவரை நடித்த படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில்லை. தற்போது அவர் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க தேர்வாகியுள்ளார். இப்படம் தான் அவருக்கு ரஜினியுடன் முதல் படமாகும்.
இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தன் மகள் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு தங்கையாக நடிக்க தேர்வாகியுள்ள நடிகை ஜீவிதா இது பற்றி கூறும்போது,
‘ரஜினியுடன் நடிப்பது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இத்தனை வருடமாக சினிமா துறையில் இருந்தும் இதுவரை அவருடன் நடித்ததில்லை. இப்போது முதல் முறையாக ரஜினியுடன் நடிப்பதால் படப்பிடிப்பு நாளுக்காக ஆர்வமுடன் இருக்கிறேன்’ என்றார் ஜீவிதா.