கமல்ஹாசன்: மணிரத்னம் கதை எழுதி, இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும், வசனங்களும், படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக நாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி இணையவே இல்லை. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் ஜோடி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். நாளை கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸாக இப்படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.