பொங்கல் திரைப்படங்கள்: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களில் ஒன்றாக வெளியாவது தமிழ் சினிமாவில் அரிதாக நடக்கும் ஒரு விஷயமாகும். அப்படி நடக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் போல இரசிகர்கள் பட்டாளம் காணப்படும். அந்நாளில் ரஜினி, கமல் படங்கள் இதுபோல் ஒரேநாளில் வெளியாகியுள்ளன. அப்போது இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். அதேபோல் விஜய், அஜித் படங்களும் இதுபோல் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளன. அப்போது இந்த இரண்டு ஹீரோக்களுக்கும், இரசிகர்களுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படும்.
இவ்விருவரின் படங்களும் கடைசியாக கடந்த 2014 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகியது. அஜித்தின் வீரம் படமும், விஜயின் ஜில்லா படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தன. அப்போதும் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் விஜய்யின் ஜில்லா படத்தை அஜித்தின் வீரம் படம் முந்தியது. இதையடுத்து வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆனது. இப்போது இந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2023 பொங்கல் அன்று விஜய், அஜித் படங்கள் ஒன்றாக மோத உள்ளன. தில் ராஜு நடிப்பில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு பட டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்துவிட்டது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித், வினோத், போனி கபூர் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இது இவர்களின் மூன்றாவது படமாகும். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர், சஞ்சய் தத், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படமும் வரும் பொங்கலன்று வெளியாகும் என்று தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான ஆர்.கே. சுரேஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.