பாவனா: வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்த கணேஷ் வெங்கட்ராம் தற்போது நடிகை பாவனாவுடன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமான இதை ஜெய்தேவ் இயக்குகிறார். தமிழில் பல வருட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடிக்கும் படமான இதுபற்றி கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‘விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளேன். ஆனால் தமிழில் மட்டும் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைக்காதது ஏன் என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்.
தற்போது அந்த வருத்தம் ‘வாரிசு’ படத்தின் மூலம் நீங்கியுள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது தமிழில் நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஓரிரு படங்களில் என் கெட்டப்பையும், மேனரிசத்தையும் மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். ஜெய்தேவ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் என்னுடன் இணைந்து பாவனா நடிக்கிறார். கொடைக்கானல் மற்றும் சென்னையில் கதை நடக்கிறது. இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்’ என்றார். கடைசியாக நடிகை பாவனா தமிழில் நடித்த படம் சரண் இயக்கத்தில் அஜித் குமார் ஜோடியாக நடித்த ‘அசல்’. இது 2010ல் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.