இயக்குனர் சேரன்: இயக்குனர் சேரன் இதுவரை இயக்கி, நடித்துள்ள படங்கள் அனைத்தும் மண்வாசனை நிறைந்த படங்களாகவும், மக்கள் மனதை தொடும் படங்களாகவும், குடும்ப பின்னணியிலும் அமைந்துள்ளன. கடைசியாக சேரன் நடிப்பில் வெளியான குடும்ப திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இதில் கெளதம் கார்த்திக் உட்பட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை போற்றும் படமாக இது இருந்தது.
தற்போது சேரன் லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘தமிழ்க் குடிமகன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீபிரியங்கா, எஸ்.ஏ.சந்திரசேகரன், லால், வேல் ராமமூர்த்தி, தீபிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ‘பெட்டிக் கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது.
‘நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரனின் படம் ரிலீசாக உள்ளது. சாதி பிரச்சினைக்கு ஒரு விடிவு தரும் விதமாக கதை அமைந்துள்ளது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது. கதை மற்றும் பாடல்களால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வி.ஹெச் மியூசிக் சார்பில் இப்படத்தின் பாடல் உரிமையை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளார். இப்படத்தில் சேரன் ஒத்துழைப்பு அபாரமானது. வரும் பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வருகிறது’ என்று அவர் கூறினார்.