75வது சுகந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று 5ஜி சேவையை தொடங்க AIRTEL திட்டம் தீட்டியுள்ளது.
இந்தியாவின் இணையத்தின் பங்கு அதிகரித்துள்ள நிலையில் அதன் விரைவை அதிகரிக்க திட்டம் தீட்டப்பட்டு 5ஜிக்கான ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதிகப்படியான ஏலத்தை எடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது. வளர்ச்சிக்கு ஏற்ப இணையதள வேகத்தை அதிகரிக்க அலைவரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் நோக்கியா, சாம்சங், எரிக்சன் மொபைல் போன் நிறுவனங்களுடன் இணைந்து பல அமைப்புகளை நிறுவி வருவதாகவும் இந்த பணிகள் முடிந்தவுடன் 5ஜி சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக டெல்லி ஐதராபாத் பெங்களூரு உள்பட ஒரு சில நகரங்களில் 75 ஆம் ஆண்டு சதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.