லைகா நிறுவனம்: வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிக்கும் படம் ‘துணிவு’. இவர்கள் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இது அவர்களின் மூன்றாவது படமாகும். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’ பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினமே விஜய்யின் ‘வாரிசு’ படமும் வெளியாக உள்ளது. விஜய் மற்றும் அஜித் படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு பொங்கலன்று ஒன்றாக திரைக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. ஏற்கனவே துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து துணிச்சலாக துணிவு படத்தை விளம்பரபடுத்தியுள்ளனர். அதில் டிசம்பர் 31ல் ‘துணிவு டே’ என்று குறிப்பிட்டுள்ளனர். அன்றைய தினம் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.