துணிவு டிரெய்லர்: ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன், சமுத்திரக்கனி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே துணிவு படத்தின் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‘அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்’ என பூடகமாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் 2023 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதும் ட்விட்டரில் #ThunivuTrailer என்ற ஹேஷ்டேக் டிரெண்டிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு துணிவு படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. தற்போது இந்த டிரெய்லர் அஜித் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.