AK62: அஜித்குமார் நடித்த ‘துணிவு’ படம் பொங்கலன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் AK62 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாக தென் இந்தியாவுக்கான நெட்ஃபிளிக்ஸ் ட்விட்டர் பக்கத்திலேயே அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுபோக மற்றுமொரு அப்டேட்டாக அஜித்தின் 62வது படத்தில் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு அஜித்தும், ஐஸ்வர்யா ராயும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித்தின் 62 வது படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கசிந்துள்ள தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.