அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மேக வெடிப்பு மற்றும் கடும் மழையின் காரணமாக 16 யாத்திரிகர்கள் பலியாகி உள்ளனர். 40 க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ராணுவம் ஈடுப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரிகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படடுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்துக்கு வந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை நிலவியதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து வானிலை சீரானவுடன் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை குகை இருக்கும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே கனமழை பெய்தது.
மேகவெடிப்பு மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் இரவு முதல் நடைபெற்று வருகிறது. மோப்பநாய் உதவியை கொண்டு தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.