ஐதராபாத்: இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’. பல கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டு அவருக்கு வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்துள்ளது. இது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் மூலம் தெரிய வநதுள்ளது. சிகிச்சைக்குப் பின் மருத்துவரகளின் அறிவுரையின் படி அவர் ஓய்வெடுக்க விமானம் மூலம் மும்பையிலுள்ள தன் வீட்டிற்கு திரும்பிவிட்டார். இதனால் படப்பிடடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பதிவில், ‘ஐதராபாத் சினிமா ஷீட்டிங்கில் ஏற்பட்ட காயத்தால் எனது வலது விலா எலும்பில் முறிவு மற்றும் தசை நார் கிழிந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன். எனது நலம் விரும்பிகள் யாரும் வீட்டிற்கு வரவேண்டாம். தற்போது நன்றாக உள்ளேன். எனது அனைத்து நடவடிக்கைகளையும் செல்போன் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.