கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர் தற்கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமானது இதை தொடர்ந்து ‘அன்றே சொன்னார் ரஜினி’ என்ற ஹேன்ஸ்டேக்கை டிரென்டிங் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த பெற்றோரின் மகளான ஸ்ரீமதி என்ற மாணவி சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் பயின்று வந்தாள். அப்பள்ளியின் விடுதியில் 3 வது மாடியிலிருந்து தற்கொலை மாணவி செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனை மறுத்து பெற்றோர் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கு மத்தியில் ஞாயிறு அன்று பள்ளி வளாகத்தில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. பள்ளியின் பொருட்கள் சூறையாடப்பட்டன பள்ளி வளாகம் அடித்து சுக்குநூறாக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள் பெரும்பாலும் தீக்கிரையாகின அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. இப்போராட்டத்திற்கும் பெற்றோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தகவல் தெரிகிறது.

இப்போராட்டத்தை நீதிமன்றம் கண்டித்தது. இச்சம்பவம் தொடர்பாக 128 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூகவலைதளங்களினை வாயிலாக போராட்டத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த வன்முறை சம்பவத்தை மாணவர்கள் போர்வையில் பல்வேறு அமைப்பினர் இணைந்து திட்டமிட்டு நடத்தியதாக கூறுகிறார்கள்.
இதையே தான் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- கள்ளக்குறிச்சி சம்பவங்களை வைத்து ரஜினி ரசிகர்கள் “அன்றே சொன்னார் ரஜினி” என்றும் “நான் தான்டா ரஜினி”, நான்தான்பா ரஜினிகாந்த் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரென்டாக்கி வருகிறார்கள்.
அதாவது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் போராட்டத்தை மாவட்ட நிர்வாகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அப்போது பொதுமக்கள் போர்வையில் சில சமூகவிரோத கும்பல் வன்முறையை ஏவிவிட்டதாக பரவலாக சொல்லப்பட்டது.
இதை தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்களையும் காயமடைந்தவர்களையும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளின் ஊடுருவலே காரணம் என்று ரஜினி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. போராட்டம் செய்தால் சமூகவிரோதி என கூறுவதாக என ரஜினியை பலர் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அவர் சொன்னது போலவே தற்போது நடந்து விட்டதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போல கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்திலும் சமூகவிரோதிகள் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ரஜினி அன்று சொன்ன கருத்து தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஒத்துப் போகிறதா ? அன்று போராட்டம் செய்தால் சமூகவிரோதியா என கேட்டவர்கள் எல்லாம் எங்கே என கேள்வி எழுப்புகிறார்கள். அன்றே சொன்னார் ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாஜகவினரும் டிரெண்டாக்குகிறார்கள்.