எஸ்.வி.ரமணன்: 1930 மற்றும் 40 களில் தமிழ் படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்கனர் கே. சுப்ரமணியத்தின் இரண்டாவது மகனான எஸ்.வி. ரமணன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 87. ஒரு நாடகக் கலைஞராக தனது கலை வாழ்க்கையை தொடங்கிய எஸ்.வி.ரமணன் அவர்கள் தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு தனது குரல் மூலம் அழகு சேர்த்துள்ளார்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களை தயாரித்த இவர் ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா போன்ற ஆன்மீக ஞானிகள் பற்றி ஆவணப்படங்கள் இயக்கி பெரும் வரவேற்பை பெற்றார். 1983 ல் ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த உறவுகள் மாறலாம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு கதை எழுதி இவரே இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
‘silver tongue broadcaster’ என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்ட எஸ்.வி. ரமணன் தென்னிந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் மூத்த ஜாம்பவானாக விளங்கினார். ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவிய இவர் அதன் மூலம் குறும்படங்கள், தொடர்கள், ஆயிரக்கணக்கான வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்தார். அவரது எடுப்பான குரல் வளம் மற்றும் அவரது தனித்துவமான திரைக்கதை பாணி அவருக்கென ஒரு தனி இரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியது.
மரியாதைக்குரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட இவர் இத்துறையில் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். எஸ்.வி. ரமணனுக்கு பாமா ரமணன் என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என்ற இரு மகள்களும் உள்ளனர். ரமணன் மகள் லட்சுமியின் மகன்தான் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் . நேற்று காலமான எஸ்.வி. ரமணன் அவர்கள் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.