நோபல் பரிசு: இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் ‘ஆனி எர்னாக்சு’க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ‘ஆல்பிரட் நோபல்’ நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 7.35 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்தாண்டு நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த 2ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரெஞ்சு பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ‘எல் ஆக்குபேஷன்’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக இவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் தன் வாழ்க்கையில் எதிர் கொண்ட பாலின துன்புறுத்தல்கள், கருக்கலைப்பு, உடல்நலக்குறைவு மற்றும் பெற்றோரின் மறைவு ஆகிய நினைவுகளை எளிய நடையில் தொகுத்து வழங்கியிருப்பதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ல் பேட்ரிக் மோடியானாவிற்குப் பிறகு நோபல் பரிசை வெல்லும் பிரெஞ்சு எழுத்தாளர் எர்னாக்சு ஆவார். இதுவரை நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு எழுத்தாளர்களில் இவர் 16 வது எழுத்தாளர் ஆவார்.