அனுஷ்கா: 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படத்துக்கு பிறகு பாக்மதி படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். 2 வருடங்களுக்கு முன் கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்திருந்தார். இதில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் உடல் எடை மிகவும் கூடியிருந்த அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். நேற்று முன்தினம் தனது 41வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். மேலும் சினிமாவுக்கு அவர் வந்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. தனது பிறந்நநாளுடன் அதையும் சேர்த்து கொண்டாடினார். கடந்த 2005ம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த ‘சூப்பர்’ தெலுங்கு படத்தில்தான் அனுஷ்கா அறிமுகமானார். தமிழில் மாதவன் நடித்த ‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 17 ஆண்டுகளில் அவர் 47 படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் அடுத்து அவர் நடிக்கவுள்ள 48 வது திரைப்படத்தில் அன்விதா ரவளி ஷெட்டி என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திர ஓட்டல் செஃப் ஆக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மகேஷ் என்பவர் இயக்குகிறார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘இந்த படத்துக்காக பெண் செஃப் சிலரை பார்த்து அவர்களின் மேனரிசத்தையும் அவர்களது பணிகளையும் பற்றி அனுஷ்கா அறிந்து கொண்டார். இம்மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என படக்குழுவினர் தெரிவித்தனர்.