கீழ்பாக்கம்: மனநல மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த மகேந்திரன் தீபா இருவருக்கும் மனநலம் சரியானதும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது. அந்த திருமண பரிசாக பணிநியமன ஆணையை வழங்கி ஆச்சரியப்படுத்தினார் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகம் 200 ஆண்டு பழமை வாய்ந்தது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். மனநலம் பாதித்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த மருத்துவமனை இது. மக்கள் மத்தியிலும் பெயர் பெற்றது கீழ்பாக்கம் மனநல காப்பகம்.
இந்த மனநல காப்பகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் வேலுரை சேர்ந்த தீபா என்பவரும் வாழ்க்கையில் ஏற்பட்ட இருவேறுபட்ட பிரச்சனைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றத்தின் மூலம் மகேந்திரனுக்கு (42) Bipolar Affective Disorder ஏற்பட்டது. தந்தை இறந்த சோகத்தை தாள முடியாத தீபாவுக்கு (36) மன அழுத்தம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக இருந்த இருவரும் மருத்துவமனையிலேயே சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் அரவணைத்து பாசமுடன் வாழ்க்கையை துவங்கவுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மகேந்திரன், தீபாவை முதன்முறையாக பார்த்த போது எனது அம்மா மாதிரி இருந்தது என்றும், எனது அம்மா ஒரு ஆசிரியர் தான், பழகிய பிறகு தான் தெரியும் தீபாவும் ஒரு ஆசிரியர் என்று. இதனால் எனது வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவும் அவரின் உருவில் கிடைத்தது போல தோன்றுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இன்று கீழ்பாக்கம் மருத்துவமனையிலேயே இந்த இருவரின் திருமணமும் நடைபெற்றது. தாலியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்து கொடுத்தார். அதனை மகேந்திரன் கட்டி அவரிடம் ஆர்வாதம் பெற்றார். இவர்களின் திருமணத்திற்கு பரிசாக அமைச்சர் அந்த மருத்துவமனையிலேயே இருவருக்கும் வார்டு மேற்பார்வையாளர்களுக்கான பணி ஆணையை வழங்கி இருவரையும் வாழ்த்தினார்.