சென்னை: ‘பெப்சி’ என்ற தென்னிந்திய திரைப்படே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஒரு பிரிவான லைட்மேன்களுக்கு உதவ சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை நிகழச்சி நடத்துகிறார். இது குறித்து ‘பெப்சி’யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசி சம்பள உயர்வு பெற்று வருகிறோம். ஒரு சாதாரண தொழிலாளி ஒருநாள் சம்பளமாக 1000 ரூபாய் பெற 100 ஆண்டுகளானது. முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகளில் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவி கிடைத்து விடும். சிறுபட்ஜெட் படங்களில் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் தொழிலாளியைக் காப்பாற்ற யாரும் இல்லை. எனவே திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் நேரடியாக அவர்களுக்கு சேர வழி செய்ய வேண்டும்.
லைட்மேன்கள் நிலையை அறிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவராகவே உதவி செய்ய முன் வந்தார். அவர்களின் நலனுக்கு நிதி திரட்ட வரும் மார்ச் 19ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதில் கிடைக்கும் நிதியை விபத்தில் இறக்கும் லைட்மேன்களின் குடும்பத்தினருக்கு உதவிட பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிதி லைட்மேன்கள் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கும் உதவுகிற திட்டம் இருக்கும் என்றால் அதற்கும் உதவ அவர் தயார் என்று தெரிவித்துள்ளார்.