வணங்கான்: பாலா இயக்கிய ‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா சமீபத்தில் விலகினார். இந்த படத்தின் இரண்டு ஷெட்யூல்களில் நடித்த சூர்யா இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகினார். மேலும் இப்படத்தை அவரது 2டி நிறுவனம் தான் தயாரித்தது. சூர்யா இப்படத்திலிருந்து விலகியதால் அவரது 2டி நிறுவனமும் தயாரிப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு பதிலாக வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுத்து காட்டுவேன் என்று பாலா சவால் விடுத்துள்ளார்.
இந்த படத்தில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் நடிகர் ‘அதர்வா’. ஆனால் இந்த படத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட சூர்யா, இதில் தானே ஹீரோவாக நடித்து தாயரிப்பதாக பாலாவிடம் கூறியிருந்தார். பின்னர் திரைக்கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் சூர்யா இப்படத்திலிருந்து விலக நேரிட்டது. சூர்யா விலகிய பிறகு மீண்டும் அதர்வாவே இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம், யானை உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள அருண் விஜய் இதில் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாலாவுடன் அருண் விஜய் பேசி வருவதாக கூறப்படுகிறது.