ஆசிய கோப்பை 2022: ஹாங்காங் அணியினரே உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று சொல்வதில் இந்தியர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம். பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அணி. ஆல் அவுட் ஆகாமல் 150 ரன்களுக்கு மேல் எடுத்தது பெரிய சாதனை என இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணியினருக்கு இடையே ஆசிய கோப்பைக்கான போட்டி நடந்தது. அதில் முதலாவதாக டாசை வென்ற ஹாங்காங் அணியினர் பவுலிங்கை தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும் ராகுலும் இறங்கினர்.
ரோஹித் 13 பந்துகளில் 21 ரன்களில் அவுட் ஆனார். பின் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் கோலி 40 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுபக்கம் சூரிய குமார் யாதவ் 22 பந்துகளில் அரை சதம் கண்டார். அதோடு, ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார் சூர்யகுமார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 44 பந்துகள் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டிய கோலி 59 ரன்களும், 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளை சிதறவிட்ட சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலக்கை நோக்கி எதிர்நோக்கி களம் இறங்கிய ஹாங்காங் அணியினர் முதல் இருவர் குறைந்த ரன்னுடன் அவுட்டாகினர். சிறப்பாக விளையாடிய ஹயத் 35 பந்துகளில் 41 ரன் அடித்து ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆனார்.சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய கின்சித் ஷா 30 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
இதனை அடுத்து வெங்கட் பிரபு ஹாங்காங் அணியினரை பாராட்டியுள்ளார்.