அவதார் 2: ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுடன் அவதார் 2 கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சர்வதேச அளவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அவதார் 2 படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் அவதார் 2 படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று ரூ. 40.5 கோடி வசூலித்துள்ளதாகவும், 2 நாட்களில் 80 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் சேர்த்து மொத்தம் 3 நாட்களில் இந்த படம் ரூ. 125 கோடியை வசூலிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அவதார் 2 படம் மொத்தமாக இதுவரை 1500 கோடிக்கும் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகததால் அவதார் 2 படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இந்தியாவிலும் அதிக வரவேற்பு காணப்படுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.