அவதார்-2: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு அவதார் படம் ரிலீசானது. இதன் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்தியா முழுவதும் 20 நாட்களுக்கு முன்பே இப்படத்துக்கான முன்பதிவு தியேட்டர்களில் தொடங்கியது. இதன் மூலம் இந்த படம் 10 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக முன்பதிவு மூலம் இவ்வளவு பெரும் தொகையை பெறும் படம் இதுதான்.
இந்த படம் வெளியாவதால் தங்களது படங்களின் வசூல் பாதிக்கும் என பயந்து பல தமிழ் படங்கள் நாளை ரிலீசாகவில்லை. கடந்த 4 வாரங்களாக வெள்ளிக்கிழமை தோறும் 7 முதல் 9 படங்கள் வரை ரிலீசாகி வந்தன. ஆனால் நாளை கட்சிக்காரன், 181 ஆகிய 2 தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
இந்நிலையில் அவதார்-2 படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், தியேட்டர் உரிமையாளர்களிடம் இந்த படத்தின் வசூலில் 70 சதவீதத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் கேட்கிறார்கள். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘தமிழகத்தில் அவதார்-2 படம் 200 தியேட்டர்களில் மட்டும்தான் ரிலீசாகிறது. வசூலில் 70 சதவீத பங்கு கேட்பது நியாயம் கிடையாது. அதே சமயம் தமிழகத்தில் தேசிய அளவிலான தியேட்டர்களில்தான் இந்த படம் அதிகம் ரிலீசாகிறது. அவர்களிடம் 50 சதவீத வசூல் மட்டுமே கேட்கிறார்கள். தேசிய தியேட்டர்களை மட்டுமே வளர்க்க பார்க்கிறார்கள்’ என்றார்.