மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு: மகாகவி பாரதி என்று அழைக்கப்படும் பாரதியார். தமிழ் பெற்றெடுத்த பிள்ளை. இவரின் கூரிய வாளாக செயல்பட்டது எழுதுகோல் (பேனா) தன் கவிதை வரிகளாலும் தன் வீர வசனங்களாலும் மக்களை விழிப்புணரச் செய்து விடுதலை தாகத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்றால் அது பாரதி ஓருவரால் மட்டும் தான் முடியும்.
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவர்.
இதையும் படியுங்கள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் பற்றி அறிவோம்
”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ” என்று பாடிவயவர். தேசிய கவிஞராக போற்றப்பட்வரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம். ஆகவே பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக இப்பிதிவின் மூலம் அறிவோம்.

பாரதியின் இயற்பெயர் | சுப்பிரமணியம், சுப்பையா என அழைக்கப்பட்டார். |
பெற்றொர் | சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் |
பிறந்த ஊர் | திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரம், இந்தியா |
புனைப்பெயர்கள் | காளிதாசன், சக்திதாசன், ஷெல்லிதாசன் |
தொடங்கிய இதழ் மற்றும் வருடம் | சக்கரவர்த்தினி, 1905 |
அவர் நடத்திய ஆங்கில இதழ் | கர்மயோகி, பாலபாரத் |
எந்த இதழில் ஆசிரியராக பணியாற்றினார் | இந்தியா |
எந்த இழில் துணை ஆசிரியராக பணியாற்றினார் | சுதேச மித்தரன் |
பாரதியின் நண்பர்கள் | பரலி நெல்லயப்பர் |
பாரதியின் துணைவியார் | செல்லம்மாள் |
பாரதியின் பிள்ளைகள் | தங்கம்மாள், சகுந்தலா |
பாரதியின் பிறப்பு மற்றும் இறப்பு | டிசம்பர் 11, 1882 ல் பிறந்தார், செப்டம்பர் 11, 1921 ல் இறந்தார். |
பாரதி பெயர் காரணம்:
பாரதியார் தன் சிறு வயதான 5ம் வயதிலேயே தன் தாயை இழந்தார். இவர் தன் சிறு வயது முதலே கவிப் பாடும் திறம் பெற்று விளங்கினார். இவரது கவி பாடும் ஆற்றலையும் திறமையையும் கண்ட எட்டயப்புர மன்னன் இவரை பாராட்டி இவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அப்போதிலிருந்தே இவரை சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார்.
பாரதியின் பள்ளிக்காலம்:
திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9ம் வகுப்பு வரை படித்தார். அப்போதிலிருந்தே அவர் கவிதை எழுதுவதில் வல்லவராக விளங்கினார். பல அறிஞர்களோடும் தமிழ் பண்டிதர்ளோடும் இருந்து தன் அறிவினை வளர்த்து கொண்டார். பல சொற் போட்டிகளிலும் ஈடுப்பட்டு வென்று வந்தார். இவரது மொழி பற்றையும் கவி எழுதும் ஆற்றலையும் கண்ட பலர் இவரை பாராட்டி வந்தனர்.
பாரதியின் திருமண வாழ்க்கை:
1897 ஆம் அண்டு செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 14 வயது. சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் இருந்தார்கள். தங்கம்மாள் 1904 ஆம் ஆண்டிலும், சகுந்தலா 1908 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.
பன்மொழி புலமை:
பாரதி தன் 16 வயதில் தந்தையை இழந்து வாடினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் பாரதியாரின் வாழ்க்கையை வறுமை புரட்டிப் போட்டது. பின்னர் பாரதியார் காசியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சில காலம் தங்கினார். அங்கே இருக்கும்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்று அம்மொழிகளில் புலமை பெற்றவரானார். இவை மட்டுமின்றி ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாரதியார் புலமைப் பெற்றவராக திகழ்ந்தார்.
பல மொழிகளை அறிந்து புலமை பெற்ற பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியதன் மூலம் தமிழுக்கு நிகரான மொழி வேறு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார்.
பாரதியின் பணி:
பாரதி தான் செய்து வந்த தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்ப்பட்டு நலிவுற்று இருந்தார். காசிக்கு புறப்பட்டு நான்கு ஆண்டுகள் வசித்து வந்தார். பின் எட்டயபுர சமஸ்தானத்தின் அழைப்பின் பேரில் வந்து சமஸ்தானத்தில் பணியாற்றினார். எட்டயபுர சமஸ்தானத்தில் சிறிது காலம் பணியாற்றி தீடிரென வெளியேறினார். பிறகு சில காலம் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பாரதியார் பணியாற்றினார். ஆசிரியர் பணியிலும் தொடர்ந்து நீடிக்க பாரதிக்கு ஆர்வமில்லை.
துணை ஆசிரியர் பணி:
சுப்பிரமணிய ஐயர் என்பவர் சுதேசமித்திரன் என்ற பெயரில் பத்திரிக்கையை சென்னையில் நடத்தி வந்தார். சுப்பிரமணிய ஜயருக்கு பாரதியாரின் அதீத எழுத்து திறமையை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்திருந்தது. எனவே சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பொறுப்பை பாரதியாருக்கு கொடுக்க நினைத்தார். பாரதியாரும் அப்பணியை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்.
பத்திரிக்கையில் பணியாற்றுவது பாரதியாரின் மனதிற்குப் பிடித்த ஒரு தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் சுதேசமித்திரன் பத்திரிக்கை மூலம் வந்த வருமானம் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சதேசமித்திரன் பத்திரிக்கையில் இருந்து விலகினார் பாரதியார்.
பாரதியின் இந்தியா பத்திரிக்கை:
சுதேச மித்திரன் பத்திரிக்கையின் துணை அசிரியர் பணியிலிருந்து விலகிய பாரதி. தானே சொந்தமாக ஓரு பத்திரிக்கையை ஆரம்பித்தார். அந்த பத்திரிக்கையின் பெயர் ‘இந்தியா’. அந்த பத்திரிக்கையின் மூலமாக தொடர்ந்து அங்கிலேயே அரசை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அதனால் ஆங்கிலேயே அரசு அவரை பலவாறு அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பாரதி ஆற்றிய இலக்கிய பணிகள்:
1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ ‘சுதந்திரப் பாடல்கள்’, தேசியப் பாடல்கள், சமூகப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள், வசன கவிதைகள், பெண் விடுதலை, இது போன்ற பல இலக்கிய பணிகளை தமிழுக்கு புகழ் சேர்த்து தொண்டாற்றி வந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பாரதின் பங்கு:
வாள் கொண்டு தாக்குவதை விட தன் கவிதை மூலம் தாக்கியவன் பாரதி. விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு அளவிடற்கரியது. சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.
பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார்.
இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
பாரதியின் மறைவு:
1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார்.
ஓரு சமயம் அவர் கோவிலுக்கு சென்று திரும்பி வருகையில் வழக்கம் போல யானைக்கு பழம், தேங்காய்களை கொடுக்க அதற்கு மதம் பிடித்திருந்தால் எதிர்பாராவிதமாக அந்த யானையால் தூக்கி எறியப்பட்டார் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். அதில் அவர் பலவாறு இன்னல்களை அனுபவித்து வந்தார். அதிலிருந்து மீண்டு வந்து தனது அன்றாட செயல்களில் ஈடுப்பட்டு வந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவம் பார்க்க வந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்து கொள்ளாமலும் மருந்துகளை சாப்பிட மறுத்தும் வந்தார். இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி தன் 39 ம் வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
நினைவுச் சின்னங்கள்:
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தமிழ், கல்வி, இலக்கியம், செய்திகள், ஜோதிடம், ஆன்மீகம் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தில் இணைந்திருங்கள்.