பாரதியார் கவிதைகள்: மகாகவி என்று அழைக்கப்படும் பாரதியார். தமிழ் பெற்றெடுத்த பிள்ளை. இவரின் கூரிய வாளாக செயல்பட்டது எழுதுகோல் (பேனா) தன் கவிதை வரிகளாலும் தன் வீர வசனங்களாலும் மக்களை விழிப்புணரச் செய்து விடுதலை தாகத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்றால் அது பாரதி ஓருவரால் மட்டும் தான் முடியும்.
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவர். இவரின் எழுதிய கவிதைகளின் வரிகளை நாம் இப்பதிவில் காணலாம்.
பாரதியார் கவிதைகள்: காப்பு-பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
இதையும் அறிந்து கொள்ளுங்கள்: மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

பாரதியார் கவிதைகள்
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
பாரதியார் கவிதைகள்
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
“காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”
பாரதியார் கவிதைகள்: பாப்பாப் பாட்டு
“ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!
பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!
வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!
பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!
வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!”