பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்: பாரதியாரைப் போல தமிழ் மகள் ஈன்றெடுத்த முத்து பாரதிதாசன் என்றால் அது மிகையாகாது. பாரதியைப் போல் தமிழுக்கு ஈடு இணையற்றவர் பாரதிதாசன். கவிதைக்கு மன்னனாக இருப்பதனாலேயே பாவேந்தர் எனப்பட்டார். புதுச்சேரியில் பிறந்து பாரதியின் மீது தீராத அன்பு கொண்டதால் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர்.
”எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா” என பாரதியாரின் கட்டளைக்கிணங்கப் பாடினார். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களை முறையாக கற்றவர். பாரதிதாசன் தமிழரிஞர், தமிழாசிரியர், அரசியல்வாதி, கவிதையாளர், திரை கதை எழுத்தாளர் என பன்முக தன்மையை பெற்றவர். தனது படைப்புகளுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற தகையாளர்.
இப்படி பன்முகங்கள் கொண்ட பாரதிதாசனின் கவிதைகளை இத்தொகுப்பில் அறியலாம்.
இதையும் கவனியுங்கள்: பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு
புகழ் பெற்ற வரிகள் சில:
தமிழின் இனிமை:
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
இன்பத்தமிழ்:
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
எந்நாளோ!
என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இம மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல் எந்நாளோ?
சங்க நாதம்:
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!
சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்.
கைமைப் பெண் பற்றி:
கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரிற் பழுத்த பலா – மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிக்கின்ற வட்ட நிலா!
புதியதோர் உலகம் செய்வோம்:
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் …
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் …
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் …
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் …
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் …
சுதந்தரம்:
தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?
என பல புகழ்மிக்க பாடல்களை எழுதியுள்ளார். அதில் சில வரிகள் உங்கள் பார்வைக்கு இது போன்ற தமிழ் இலக்கியம், கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், ஆன்மீகம், ஜோதிடம், செய்திகள், பழமொழிகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.