அக்ஷ்ய் குமார்: புகழ் பெற்ற இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் அதிகளவு இடம் பிடித்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை நேர்காணல் எடுத்த பிறகு மேலும் பிரபலமடைந்தார். ஆனால் அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்ஷ்ய் குமார் வாக்களிக்கவில்லை. இதற்கு காரணம் அக்ஷ்ய் குமார் கனடா நாட்டு குடியுரிமையை வைத்திருந்தது தான் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அப்போது முதல் பல்வேறு தரப்பினரின் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டு வந்தார்.
இந்நிலையில் தனது கனடா நாட்டு குடியுரிமையை துறக்க போவதாக அக்ஷ்ய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்தியா தான் எனக்கு எல்லாம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இது குறித்து அக்ஷ்ய் குமார் கூறுகையில்,
‘1990களில் எனது 15க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் நான் மனமுடைந்து போனேன். அப்போது கனடாவில் இருந்த என் நண்பன் என்னை கனடாவுக்கு வரும்படி அழைத்தான். அதனால் கனடா குடியுரிமையை பெற்றேன். இந்த காரணங்கள் தெரியாமல் அனைவரும் என் இரட்டை குடியுரிமை பற்றி தவறாக பேசுகிறார்கள். இப்போது என் கனடா குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளேன். நான் இங்குதான் சம்பாதித்தேன். என்னை இந்தியாவுக்கு மீண்டும் தர வாய்ப்பு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம். இப்போது கனடா குடியுரிமையை துறக்க விண்ணப்பம் செய்து விட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.