பாம்பே ஜெயஸ்ரீ: கர்நாடக இசைக்கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ் உள்பட பல மொழிகளில் பாடி பிரபலமடைந்தவர். அவருக்கு மூளையில் திடீரென்று ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார். இந்நிலையில் அவர் ஓட்டலில் தங்கியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியுள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான பின்னணிப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ திடீரென சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது இசைக் கலைஞர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.