கல்வித் திட்டம் என்பது வெறும் பட்டமளிப்புடன் முடிந்து விடும் விஷயமாக இருக்க கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கல்வி குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 1 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் ”அட்சய பாத்திரா” என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய கல்விக்கொள்கை குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதற்கு உதவும். புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கமே இதுதான். 21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான புதிய சிந்தனைகளை கொண்டதாக புதிய தேசிய கல்விக்கொள்கை இருக்கும்.

இந்த கல்விக்கொள்கை மாணவர்களை வெறும் பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்றுவிடாது. மனித வளங்களை வைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அடிப்படையிலேயே இந்த புதிய கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய தாய் மொழிகளில் கல்வியை கற்பதற்கான வாய்ப்பை புதிய தேசியக் கல்விக் கொள்கை வழங்குகிறது.
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தை கடந்த 5 ஆண்டாக புகுத்த திட்டமிட்டு வருகிறது. ஆனால், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக்கொள்கை, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, சிறுவயதிலேயே தொழிற்பயிற்சி வழங்குவது தேசியமயமான கல்விக்கொள்கை போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியானவுடன் அதன் மீதான எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
இதனை கடுமையாக எதிர்க்கும் திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பை முன்னிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வேலை செய்வதற்காக ஆட்களை தயார் படுத்தும் விதத்தில், இந்தியாவில் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். கல்வி திட்டம் என்பது பட்டமளிப்புடன் நின்று விடும் விஷயமாக இருக்க கூடாது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதற்கான மனித ஆற்றலை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.