அக்கரன்: எந்த இயக்குனரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் தனியாக சில குறும்படங்களை இயக்கிவிட்டு, தற்போது ‘அக்கரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண் கே.பிரசாத். குன்றம் புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்துள்ள இதில் இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர், முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இது குறித்து அருண் கே.பிரசாத் கூறியதாவது.
மதுரையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா, பிரியதர்ஷினி. அப்பகுதியில் நடக்கும் அரசியல் போட்டி காரணமாக திடீரென்று பிரியதர்ஷினி கடத்தி கொலை செய்யப்படுகிறார். மகள்கள் மீது உயிரையே வைத்திருந்த பாசமிகு தந்தை எம்.எஸ்.பாஸ்கர் தனது இளைய மகளை கொன்றவரை எப்படி கண்டுபிடித்து பழிவாங்குகிறார். கடைசியில் தன்னை எப்படி நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை.
இளம் ஹீரோவாக ‘கபாலி’ விஷ்வந்த், அவரது ஜோடியாக வெண்பா நடித்துள்ளனர். ‘வர்மா’ ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர், நமோ நாராயணன் நடித்துள்ளனர். ஹீரோ என்பதால் எம்.எஸ்.பாஸ்கரின் கெட்டப் மற்றும் மேனரிசங்கள், பாடிலாங்வேஜ் வித்தியாசமாக இருக்கும். அக்கரன் என்றால் யாராலும் அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன் என்று அர்த்தம். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய எஸ்.ஆர்.ஹரி இசையமைத்துள்ளார். மதுரை பின்னணியில் கதை நடக்கிறது என்று அவர் கூறினார்.