டிஎன்பிஎல் 2022 இறுதி போட்டியில் கலந்து கொண்ட கோவை அணியும் சேப்பாக் அணியும் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
கோவை: TNPL 6வது கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் களமிறங்கின.
டாசை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி வீரர்கள் 17 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.

சேப்பாக் அணியின் சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டு எடுத்தனர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவுசிக் காந்தி ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சேப்பாக் அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் கோவை கிங்ஸ் அணிக்கும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கும் இந்தாண்டு 6வது சீசன் டிஎன்பிஎல் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.