CHESS OLYMPAID: பிரம்மாண்டமாக வலம் வந்த செஸ் ஓலிம்பியாட் ஜோதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
செஸ் ஓலிம்பியாட்டினை ஓட்டி நாளை ஓரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்திற்கும் ஊள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மிகச்சிறப்பான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியது, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைப்பது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும், பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களைப் பரப்புவது போன்ற பல்வேறு வகையில் மக்களிடம் இப்போட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.
அந்த வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதத்தில், ‘தம்பி’ உருவப்படம் மற்றும் செஸ் போர்டு படங்களை அச்சடித்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக, முதல் தடவையாக நடைபெறும் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 19 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி 26 மாநிலங்கள் மற்றும் 75 நகரங்கள் வழியாக பயணித்து நேற்று திங்களன்று புதுச்சேரி வழியாக தமிழகம் வந்தடைந்தது. இந்த ஜோதி முதலில் கோவை நகருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று மாலை மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.