சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜ பெருமானின் திருக்கோவிலில் உலக பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். பஞ்சபூதத் திருத்தலங்களில் ஆகாயமாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருபவர் தில்லை நடராஜர். இத்திருக் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அவ்வகையில் இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசனத்திற்கான திருவிழா இன்று 28.12.2022 கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (29-ந்தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, 30-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 31-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, ஜன.1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

4-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திரு விழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர், மதியம் 2.00 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துபல்லக்கு நடைபெறுவதுடன் விழா நிறைவடைந்து விடும். இந்த ஆருத்ரா திருவிழாவினை சிறப்பான முறையில் தீட்சிதர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஆருத்ரா தரிசனத்தை ஓட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. நகராட்சி சார்பில் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் கூடிய தண்ணீர் மற்றும் நடமாடும் கழிப்பறை போன்றவற்றை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.