‘உங்கள் துறையில் நான்’ என்ற திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் பாதுகாவலாகவும் தூணாகவும் விளங்கும் காவலர்களின் துயரத்தை போக்கும் வண்ணம் அவர்களின் குறைகளை மனுக்களாக பெறும் ‘உங்கள் துறையில் நான்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக சென்னையில் உள்ள காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் காவல்துறையினரின் நலன் காத்திட – காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம்நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கியது, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையினை 60 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது.
இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300/- வழங்கியது, 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவல் ஆளிநர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட “(CLAPP) விடுப்பு செயலி” வெளியீடு, காவலர்களுக்கான இடர்படியை ரூ.1000/- ஆக உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சூற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்று ஓன்றை நட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.