மிஸ்டர் லூ: சீனாவை சேர்ந்த லூ என்பவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கடந்த இரண்டு மாதங்களாக தீராத முதுகு வலியினால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அவரை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மார்பு, வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் நோய் தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் நோய்தொற்றிற்கான காரணம் என்ன என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஏதேனும் அசாம்பாவிதம் அவருக்கு ஏற்பட்டதா என்று அவரிடம் விசாரித்த போது அவர் இல்லை என்றே மறுத்து வந்துள்ளார். பின்னர் அழற்ஜியை ஏற்படுத்தும் உணவுகள் ஏதேனும் சாப்பிட்டாரா என்று விசாரித்த போதுதான் அவரது மனைவி அவர் உயிருடன் நண்டை விழுங்கியதாக கூறியுள்ளார்.
அதுபற்றி லூவிடம் கேட்டபோது அதற்கு அவர் தன் மகளை நண்டு கடித்ததாகவும், நண்டை பழிவாங்குவதற்காகவே அதை உயிருடன் விழுங்கியதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரது ரத்தமாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில்தான் அவர் நண்டை உயிருடன் விழுங்கியதால் மூன்று ஒட்டுண்ணிகள் உடலுக்குள் சென்றுள்ளன. அதுதான் அவரது பிரச்சினைக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு திங்கள்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை மருத்துவர்கள் முறையாக பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.